Sunday, December 31, 2006

நாசிம்மனும் நானும்

பள்ளிக்கூடம் படிக்கும் போது மகாபலிபுரம் கூட்டிட்டுப் போனாங்க. அதுக்கப்புறம் ஒரு 15 வருஷம் கழிச்சி இப்போதான் போறேன். அந்த யானயும், நந்தியும் ஞாபகமிருக்கு.மத்ததெல்லாம் புதுசாதான் தெரியுது.
பள்ளிக்கூடத்துல சொல்லிக்குடுத்தாங்களான்னு தெரியல. ஆனா எனக்கு நிறைய சந்தேகம் இப்போ இருக்கு.

ரெண்டு கோபுரத்துல சின்னதுல கலசத்த உடச்சது யாரு? இல்ல செய்யும் போதே இப்படித்தான் செஞ்சாங்களா?

இந்த போட்டோவுல தெரியரது ஏதோ இயந்திரத்தை வச்ச இடம்மாதிரி இருக்கு. பள்ளம் சரியான சமதளம். அந்த காலத்துல கண்டிப்பா ரொம்ப சிரமப்பட்டு செஞ்சிருப்பாங்க.

படிப்பதற்கு வசதியாக கீழுள்ள இரு படங்களையும் க்ளிக் செய்து கொள்ளவும்.

ப்ளம்பர் அந்தோனி

விஷேசமான போட்டோ:

ப்ளம்மர் அந்தோனி எதுக்காக வெங்கடாஜலபதி படத்த போட்டாரு?

எத்தன பேருடா கிளம்பிருக்கீங்க?

மெட்ராஸ் வந்து ஒரு வருஷத்துக்கும் மேல ஆகுது. இப்போதான் மகாபலிபுரம் போக வாய்ச்சிருக்கு. அத்தை பசங்க ஸ்கூல் லீவுக்கு இங்க வந்தாங்க. அவங்களோட போயிருந்தேன். கோயம்பேட்லருந்து பஸ். சீட் புடிச்சி வசதியா உக்காந்ததும் ஒருத்தன் வந்து நோட்டீஸ மடில வெச்சிட்டுப் போனான்.

குஜராத்ல பூகம்பம் 2001ல வந்துச்சு. இப்போ 2007. முழுசா 6 வருஷமாச்சு அவன் தமிழ்நாடு வந்து. ஒரு ஊருல குடியேறி 6 வருஷத்துல பொழக்க வழிகண்டுபுடிக்க தெரியாத வக்கத்தவனுக்கு உதவி செய்ய மனசு வரல. இல்ல அடுத்தவங்க அனுதாபத்த கீறி பொழக்கறதயே பொழப்பா வச்சிருக்கானா தெறியல.
ஒரு ரூபா குடுக்க மனசில்ல. நீ என்னாத்துக்கு இந்த பேச்சி பேசிறன்னு கேக்கறீங்களா? நானுங்குடுத்தேன். ஒர்ரூபா ரெண்ரூபா இல்ல. முழுசா 100 ரூபா நோட்டு. 2000மாவது வருஷம். என் தாத்தா இறந்துட்டாருன்னு போன் வந்து பஸ் புடிச்சி போய்க்கிட்டு இருக்கேன். பக்கத்து சீட்ல உக்காந்த ஒரு 40 வயசு ஆளு, தான் ஒரு ஆடிட்டர்னும், ஒரு ஆஸ்ரமத்லர்ந்து வீட்டுக்குப் போறதாவும், பொண்டாட்டி மனநிலை சரியிள்ளாதவங்கன்னும், பஸ்க்கு காசு குடுத்தா ஊருக்குப்போய் மணியார்டர் அனுப்பறதாவும் சொன்ன பேச்ச நம்மி 100 ரூபா நோட்ட குடுத்தேன். கூடவே அட்ரசும் குடுத்திருந்தேன். வருஷம் 7 ஆச்சி. இன்னும் மணியார்டர் வரல.
இந்த அனுபவத்தோட நான் எப்படி இந்த குஜராத்காரனுக்கு 1 ரூபா குடுக்கறது.

Wednesday, December 20, 2006

மீட்டருக்கு மேல...

அரசு சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் விளம்பரங்களை விடுத்து இது போன்ற பயனுள்ளவைகளையிட்டால்?....

ஜெயலலிதாவை சொன்னால் தி.மு.க ஆதரவாளனென்றும் கருணாநிதியை சொன்னால் அ.தி.மு.க ஆதரவாளனென்றும் என்னை நீங்கள் நிணைக்கக்கூடும் என்பதால், வசுந்தராராஜே!

Tuesday, December 19, 2006

ரஜினியின் முதுகில் சவாரிசென்னையில் ஹோர்டிங்களில், தினத்தந்தி பேப்பரில் இந்த விளம்பரங்களைப் ஒரு வாரமாகப் பார்க்க முடிகிறது. தினத்தந்தி, மாலைமலர் குழுமத்தைச் சேர்ந்த "ஹலோ FM"ன் விளம்பரம். இந்த விளம்பரதை வெளியிட்டிருக்கும் FM ரேடியோவிற்கு முதுகெழும்பு இல்லாததையே இவ்விளம்பரம் தெளிவுபடுத்துகிறது. ரஜினிகாந்த், கமல் போன்ற ஹீரோக்களின் Brand Equityயை கள்ளத்தனமாக பயன்படுத்தி அவர்கள் முதுகில் சவாரி செய்ய நினைத்திருப்பது அற்பத்தனம். இந்த விளம்பரத்தைத் தயாரித்திருக்கும் பிரபலமான விளம்பர கம்பெனியில் கற்பனை தீர்ந்துவிட்டதா இல்லை "ஹலோ FM" குழுமத்தின் ரசணை இவ்வளவு மட்டமானதா?

Monday, December 11, 2006

தெரியாமத்தான் கேக்குறேன்!


தெரியாமத்தான் கேக்குறேன்!
நான் தப்பு பண்ணினா போலீஸ் கேப்பாங்க. போலீஸ் தப்பு பண்ணினா நாம கேட்கக் கூடாதா? சட்டத்தில இதுக்கு இடமில்லயா? நாம கேட்கக் கூடாதுன்னா அப்ப யார் கேட்கலாம்?

Saturday, December 09, 2006

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!

சிவசங்கர் தத்துவம் மாதிரியான ஒன்ன மெயில்ல அனுப்பிச்சிருந்தான். அத நீங்களும் தான் பாருங்களேன்.

கீழிருக்கும் வரி உண்மை.
மேலிருக்கும் வரி பொய்.


என்னடா இது ஒரே தத்துவார்த்தமா இருக்கே. ஒன்னும் புரியலயே!

அது உண்மை.
இது பொய்.
அப்போ அது பொய்,
இது உண்மை.
அப்படின்னா அது உண்மை...
இது பொய்.
சரி.. அப்போ அது பொய்...
இது உண்மை.
இது உண்மைன்னா அது பொய்.
அது பொய்ன்னா இது உண்மை.
அய்யோ!!!
டேங்ங்கொம்**... ஓங் குசும்புக்கு அளவேயில்லயா... வருவல்ல... அப்ப அடிக்கிறேன்டா ஆப்பு...

இது எந்த வகையிலும் சேராத ஒரு படைப்பு.
நீங்களும் வையுங்க சிவசங்கருக்கு ஆப்பு.

("குறும்பு" என்ற தலைப்பில் தேன்கூடு போட்டிக்காக)

Monday, December 04, 2006

முப்பது நாட்களில் இந்தி பாஷை

இந்தி இனிய மொழி தான்.
மறுக்கவில்லை நான்.
பள்ளி வயதில் திணிக்கப்பட்டேன்.
திமிறினேன்.

வேலைதேடி நண்பனுடன் டில்லி செல்ல திட்டம்.
தமிழகத்தை தாண்டி முதல் பயணம்.

"முப்பது நாட்களில் இந்தி பாஷை"யை ரயிலிலமர்ந்து
மூன்றே நாளில் முடிக்கவெண்ணி தோற்றேன்.

அழகு தான் டில்லி.
கேட்காத ஒலியில், பார்க்காத வடிவத்தில் புதிய மொழி.
கூர்மையான காதுகள், கண்கள் தந்தது டில்லி.

முப்பது நாளில் இந்தி பாஷை
எளிதாய் வந்தது.

வேலைதேடி ஓய்ந்த வேலையில்
இந்தி சொல்லித்தந்தேன் தமிழர்க்கு
தமிழ் தந்தேன் "இந்தி"யருக்கு.


1. இந்தி கற்பது எளிது.
தேவைப்படும் போது கற்றுக் கொள்ளலாம். தமிழ்க் குழந்தைகள் ப்ராத்மிக் படித்து சாதிக்கக்கூடியது எதுவுமில்லை (சான்றிதழ் சேர்ப்பது தவிற). குழந்தைகள் வளர்ந்ததும் தேவையான மொழியை தானே கற்றுக் கொள்ளும்.
எதிர்காலத்தில் என் குழந்தைக்கு வடநாட்டில் வேலை கிடைத்தால் என்ன செய்வது என்று கேட்போருக்காக: தங்கள் குழந்தைக்கு ஜாப்பனீஸும் கற்றுக் கொடுங்கள். உலகமயமாக்களில் ஜப்பானிலும் வேலை கிடைக்கலாம்.

2. தமிழை இந்தி குழந்தைகளுக்கு சொல்லித்தருவதும் எளிது.
ஒவ்வொரு இந்தி கற்ற தமிழனும் ஒரு குழந்தைக்குத் தமிழைக் கற்றுத்தர உறுதியெடுக்கலாம். குறைந்தபட்சம் தமிழ் மீது பற்று அல்லது விருப்பம் ஏற்படுத்தலாம்.

குறிப்பு: இந்த பதிவை தேசிகன் சாரின் "तमिल" என்ற பதிவிற்கு பின்னூட்டமாகவும் வாசிக்கலாம்.

Wednesday, November 29, 2006

அய்யய்யோ, பாரதி!

"எனக்கு யாரும் இல்ல. எனக்கு எந்த சந்தோசமும் இன்னமேல் தேவயில்ல. நான் இன்னைக்கு தூங்கமாட்டேன். கண்ல தண்ணி வந்தா எனக்கு தூக்கம் வராது. கஷ்டமாயிருக்கு. உன்னய கஷ்டப் படுத்தியிருந்தா மன்னிச்சிக்க."
-நான் மறுக்கையில் உன் பதில்.

" 'சுதா விஜய்' இல்ல 'சுதா விஜயகுமார்'. என் பேர் எப்படி வெச்சா உனக்குப் பிடிக்கும்? நீ எது சொல்றியோ. உன் இஷ்டம். எனக்கு ஓகே"
-என்னையும் எனது இரு பெயர்களையும் உனதாக்கினாய்.

" லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ - சுதா விஜய்."
-காலை உன் மெஸேஜில் விழிக்கிறேன்.

"ஆமா. நான் நல்லாயில்லதான். சொல்லிட்டல்ல. எவ வேணுமோ அவகிட்ட போ."
-விளையாட்டாய் சொன்னது தெரிந்தும் பொய் கோபம் கொண்டாய்.

"எங்க பாத்தாலும் நீதான்டா தெரியிற. சொல்லுடா. நான் என்ன பண்றது. பேசாமா இங்கயே வந்துடுடா"
-எனக்கு சென்னைக்கு மாற்றலாகி ஒருவாரமாகியிருந்தது.

"ஒன்னும் டென்ஷன் எடுக்காத. நான் எப்பவும் உன்கூடதான் இருப்பேன்."
-நம் திருமணத்தைப் பற்றி பேச்செடுக்கும் போதெல்லாம் சொல்வாய்.

"டேய்! நான் அப்புறம் போன் பண்றேன்டா."
-பதிலுக்கு எதிர்பாராமல் தொடர்பைத் துண்டிக்கிறாய். சுவருக்கும், தெறித்த விழுந்த செல்போனுக்கும் வலியிருக்காது. அவைகள் காதலிப்பதில்லை.

உன் திருமண அழைப்பிதழ் கொரியரில் வந்தது. பிரித்துப் படிக்க மனமில்லை.

"சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா."

யார் எழுதினது? பாரதியாரா? அய்யய்யோ, பாரதி! உனக்குமா இந்த கொடும நடந்துச்சு!

Monday, November 27, 2006

நெட்டவேலம்பட்டி

நல்லகாலம், மழை வந்து பசேல்னு இருக்கு. ஒரு வருஷம் முன்னாடி கொடும...ஊரு சந்தோஷமா செழிப்பா இருப்பது, குழந்தைகள் முகத்தில் தெரியும்.

Thursday, November 23, 2006

"நான் என்ன கைநாட்டா?"


Finger Print Security Access System முன்பு ஒரு விஞ்ஞானி கேட்டுக்கொண்டிருக்கிறார், "நான் என்ன கைநாட்டா?".

இந்த வாரம் ஆனந்தவிகடன் "கற்றதும் பெற்றதும்" பகுதியில் சுஜாதா அவர்கள் அறிவித்த போட்டிக்கு என்னுடைய பங்களிப்பு. ஒரே வரியில் ஒரு அறிவியல் கதை. ஒரு வாரத்திற்குள் படைப்பை அனுப்பி பங்கேற்க என்னால் இயலவில்லை.

Wednesday, November 22, 2006

பூத்தாலும் காயா மரம்...

பழமொழி நானூறு - 93ம் பாடல்

பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.


முதல் வரியை தவிற வேறெதும் புரியவில்லை.தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.தியாகராஜன்.ரெங்கராஜன்@ஜீமெயில்.காம்

Friday, November 17, 2006

ட்டுர்ர்ர்ர்ர்ர்.....

(அண்ணா நகர் 12வது மெயின் ரோடு 3வது ஆட்டோ ஸ்டேண்டு)
"இந்தாப்பா ஆட்டோ அப்பல்லோ வருமா?..."
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்ர்...

"பாத்து என்னய புடிச்சி உக்காந்துக்க. இவனுங்க ஓட்டுற ஓட்டுல..."
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...

(சாந்தி காலனி சிக்னல் 11 10 9 8 7 6 5 4 3 2 1)
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...
"இப்பிடிதான் மூணு வருஷம் முந்தி உங்கப்பா 110 ரூபாய ஆட்டோல மிஸ் பண்ணிட்டாராம். இவனுங்கள நம்பவே கூடாது."
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...
"எதுக்குப்பா இப்படி சந்து சந்தா சுத்தற... காசு நான்ல தர்றேன்."
ட்டுர்ர்ர்...

(கீழ்பாக் சிமெட்ரீ ரோடு)
"இவங்க மீட்டர்ல வெக்கற சூட்ல தான் இன்னைக்கு வெயில் 45 டிகிரிய தொடுது."
ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...

(சங்கம் தியேட்டர் எதிரில் அப்பல்லோ)
"அம்மாடி ஒருவழியா வந்துட்டான்டி. எவ்ளோப்பா ஆச்சி?..."

"நம்ம வண்டி பிரசவத்துக்கு இலவசம்மா..."

அம்மாவும் பெண்ணும் வாயடைத்து நின்றனர்.

Monday, November 13, 2006

சூடு போட்டுக் கொண்ட பூனை நான்

ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்பொதும்.
-"வலி" என்ற தலைப்பில் வித்யாஷங்கர் அவர்கள் ஆனந்தவிகடன் முத்திரைக் கவிதையாக எழுதியது.

முன்னரே படித்திருக்கிறேன். இந்த கவிதையை என்னுடைய கற்பனை என தவறாக எண்ணி, "மேளச் சத்ததில்..." என்று பதிவு செய்ததற்கு மன்னிக்கவும். என் நண்பன் சிவசங்கர் அல்லது வேறொருவர் சுட்டிக்காட்டும் முன் என் தவறை நானே திருத்திக்கொண்ட வரையில் எனக்கு சந்தோஷமே...

Saturday, November 11, 2006

ரெண்டே வார்த்தை...

சுஜாதா அவர்களின் "சிறு சிறு கதைகள்" படித்துவிட்டு, நான் முயற்சி செய்த இரண்டு வார்த்தைக் கதை.

தலைப்பு: பலிகொடுப்பவனும் பலிகடாவும் வேண்டிக்கொண்டது.
கதை: "கடவுளே, காப்பாத்து!"

Friday, November 10, 2006

மூதுரை - 2ம் பாடல்

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்


நல்லவருக்கு நாம் செய்த உதவி கல் மேல் எழுத்து போல நீடித்துக் காணப்படும் என்றும், ஈரமிலாத நெஞ்சத்தார்க்கு செய்த உதவி நீர் மேல் எழுத்துப்போல் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் எனக்கு சந்தேகம் என்னவெனில், காணப்படும் என்பது யாரால்? உதவி பெறுபவராலா, உதவி செய்யும் நம்மாலா அல்லது ஒரு மூன்றாம் நபராலா?

உதவி பெறுபவர் நாம் செய்த உதவியை நினைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறில்லையா? நாம் பிறருக்கு ஒரு கையால் செய்த உதவி மறு கைக்கே தெரியக்கூடாது என்றெங்கேயோ படித்த ஞாபகம். அப்படியிருக்க, நாம் அதை கல்மேல் எழுத்துபோல நினைத்துக்கொண்டேயிருக்கலாமா? நாம் பிறருக்கு செய்த உதவி மூன்றாமவருக்கு தெரியலாமா?

நான் கேட்பது சத்தியமாக விவாதமல்ல. என் தேடலுக்கான விடை. தயவு செய்து என்னை தெளிவடையச் செய்யவும்.

மேளச் சத்ததில்...

ரொம்ப வருஷமாவே என் மனசை அறுத்துக் கொண்டிருந்த வார்த்தைகள். இப்போது தான் எழுத்தாக்க முடிந்தது.

"ஓங்கி ஒலிக்கும்
மேளச் சத்ததில்
கேட்கப்படாத விசும்பல் ஒலி."


எல்லோருக்கும் கல்யாணத்திற்கு முன்னொரு காதல் இருந்ததாக பலமாக நம்புகிறேன். வேறொருவரை காதலித்த மணப்பெண்ணோ, மணமகனோ அல்லது அவர்களை ஒருதலையாக காதலித்தவர்களின் விசும்பல் ஒலி மேளச்சத்ததில் கேட்கப்படாமல் போவது உறுதி.

Thursday, November 02, 2006

பட்டாம்பூச்சி பறக்குது...

நாளைக்கு பெங்களூர் (பெங்களூரூ) போகிறேன். என்னோட ஃப்ரெண்டுக்குக் கல்யாணம் வரும் திங்கள்கிழமை. ஆப்ரேஷன் முடிந்து முதல் பயணம். ட்ரெய்ன்ல போறதால ஒன்னும் பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்.

பெங்களூரைப் பற்றி நினைக்கும் போதே மனசில ஒரு பட்டாம்பூச்சி பறக்குது. ஒரு உற்சாகம் கிடைக்குது. நான் பெங்களூரிலிருந்த ஒன்றரை வருஷம் என்னால மறக்க முடியாதது. காலை தரையில் ஊன்றி நடக்காத காலம். எப்பொதும் ஏதோ ஒரு விஷயம் என்னை மிதக்க வைத்துக்கொண்டே இருந்தது. சரி இறந்த காலம் பற்றி பேசிப் புண்ணியமில்லை.

வேறென்ன...

Wednesday, November 01, 2006

அர்த்தம் புரிந்தவர்கள்...

இதை நான் எங்கையோ படித்திருக்கிறேன். இதன் அர்த்தம் புரிந்தவர்கள் தயவு செய்து எனக்கும் சொல்லவும்.

"எனக்காக எதையும் வைத்துக்கொள்ளாதபோது, என்னிடமிருந்து எவரும் எதையும் எடுத்துக்கொள்ள முடியாது."

ப்ரேக் பிடிக்கல...

பொதுவா நான் இந்த forwarded SMSஐ படிப்பதில்லை. ஆனா இன்னைக்கு மதுபரத் அனுப்பிய ஒரு ஜோக்கை ரசித்தேன்.

ஆசிரியர்: ஏன்டா சைக்கிளை எம்மேல மோதின?
மாணவன்: ப்ரேக் பிடிக்கல சார்.
ஆசிரியர்: ப்ரேக் நல்லாதானடா பிடிக்குது.
மாணவன்: ப்ரேக்க நான் பிடிக்கல சார்.


இதெப்படி இருக்கு...

Tuesday, October 31, 2006

கவித... கவித...

அட்ரஸ் ஒன்றை தேடுவதற்காக போன வருஷ டைரியை புரட்டிக் கொண்டிருக்கையில் நான் எழுதிய கவிதை ஒன்று கண்ணில் பட்டது.

"நீ பிறப்பதற்கு முன்னரே
நிலவைப் பார்த்தவன் நான்.
அது இவ்வளவு பிரகாசமாயிருக்கவில்லை."


ஆகஸ்ட், 2005ல் எழுதப்பட்டிருக்கிறது.

Monday, October 30, 2006

இடஒதுக்கீடு

மதுபரத் வீட்டுக்கு வந்திருந்தான். வேற ஏதோ பேசிக்கிட்டு இருக்கும் போது இட ஒதுக்கீடு பற்றி ஒரு பேச்சு வந்தது. காலேஜ் மற்றும் வேலை வாய்ப்பில் பொருளாதார வசதியில் பின் தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது என் வாதமாக இருந்தது. நீங்க என்ன சொல்றீங்க?

Saturday, October 28, 2006

பட்டாதான் தெரியும்

திரு எப்பவும் போல மிஸ்ட் கால் குடுத்திருந்தான். கால் பண்ணினேன். மழையில் சரியா ரோடு பார்க்க முடியாம ஆக்ஸிடென்ட். என்னை மாதிரி நீங்களும் பயப்பட வேண்டாம். சின்ன அடிதானாம். மழைக்காலத்துல பாத்து வண்டி ஓட்டுங்கடா! பட்டாதான் தெரியும் அதோட வலி.

Friday, October 27, 2006

கண்ணும் கண்ணும் நோக்கியா...

அக்டோபர் 19, 2006. தீபாவளிக்கு முந்தைய தினம். அன்று மட்டும் இந்தியாவில் நாலு லட்சம் நோக்கியா மொபைல் போன்கள் விற்பனையாகி உள்ளன. இதற்கு முன் உலகெங்கிலும் ஒரே நாளில் ஒரு லட்சம் போன்கள் விற்கப்பட்டது சாதனையாக இருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் 30% போன் விற்பனை, சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து. இந்தியா முன்னேறுகிறதா?

கடன் அன்பை முறிக்கும்

இந்த மாதிரி விளம்பரம் தினமும் நியூஸ்பேப்பரில் வருவதை பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள். என்ன தோன்றியது இதைப் பார்க்கும் போது? எனக்கு இந்த விளம்பரம் பார்க்கும் போது நிறைய சந்தேகங்கள் எழுந்தன.
முதலில், ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கும் போது, தவணையைக் கட்டத் தவறினால், இதுபோல் வாடிக்கையாளர்களின் வராலாறு அம்பலப்படுத்தப்படும் என்பது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிரிக்குமா?
இரண்டாவது, கடனை வசூலிக்கும் முறை: கடனாளியை அவரின் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி வசூலிப்பது கந்துவட்டிக்காரர்களின் பாணி. வங்கிகள் "நாணயம் தவறிய கடன் தாரர்கள்" என்று விளம்பரப்படுத்துவதும் அதே நோக்கில் தானே. என்ன வித்தியாசம் கந்துவட்டிக்காரனுக்கும் வங்கிகளுக்கும். கடனை வசூலிப்பதில் தவறில்லை. அதற்கு இது மட்டுமே வழியில்லை. மாற்று வழியை என்னிடம் வங்கிகள் கேட்டால், அவை வங்கிகளில்லை.
மூன்றாவது, பத்திரிக்கைகள் இதைப்பற்றி அமைதியாக இருப்பது. அவர்களுடைய விளம்பர வருமானம் பாதிக்கப்படுமோ?