Wednesday, November 29, 2006

அய்யய்யோ, பாரதி!

"எனக்கு யாரும் இல்ல. எனக்கு எந்த சந்தோசமும் இன்னமேல் தேவயில்ல. நான் இன்னைக்கு தூங்கமாட்டேன். கண்ல தண்ணி வந்தா எனக்கு தூக்கம் வராது. கஷ்டமாயிருக்கு. உன்னய கஷ்டப் படுத்தியிருந்தா மன்னிச்சிக்க."
-நான் மறுக்கையில் உன் பதில்.

" 'சுதா விஜய்' இல்ல 'சுதா விஜயகுமார்'. என் பேர் எப்படி வெச்சா உனக்குப் பிடிக்கும்? நீ எது சொல்றியோ. உன் இஷ்டம். எனக்கு ஓகே"
-என்னையும் எனது இரு பெயர்களையும் உனதாக்கினாய்.

" லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ - சுதா விஜய்."
-காலை உன் மெஸேஜில் விழிக்கிறேன்.

"ஆமா. நான் நல்லாயில்லதான். சொல்லிட்டல்ல. எவ வேணுமோ அவகிட்ட போ."
-விளையாட்டாய் சொன்னது தெரிந்தும் பொய் கோபம் கொண்டாய்.

"எங்க பாத்தாலும் நீதான்டா தெரியிற. சொல்லுடா. நான் என்ன பண்றது. பேசாமா இங்கயே வந்துடுடா"
-எனக்கு சென்னைக்கு மாற்றலாகி ஒருவாரமாகியிருந்தது.

"ஒன்னும் டென்ஷன் எடுக்காத. நான் எப்பவும் உன்கூடதான் இருப்பேன்."
-நம் திருமணத்தைப் பற்றி பேச்செடுக்கும் போதெல்லாம் சொல்வாய்.

"டேய்! நான் அப்புறம் போன் பண்றேன்டா."
-பதிலுக்கு எதிர்பாராமல் தொடர்பைத் துண்டிக்கிறாய். சுவருக்கும், தெறித்த விழுந்த செல்போனுக்கும் வலியிருக்காது. அவைகள் காதலிப்பதில்லை.

உன் திருமண அழைப்பிதழ் கொரியரில் வந்தது. பிரித்துப் படிக்க மனமில்லை.

"சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா."

யார் எழுதினது? பாரதியாரா? அய்யய்யோ, பாரதி! உனக்குமா இந்த கொடும நடந்துச்சு!

Monday, November 27, 2006

நெட்டவேலம்பட்டி

நல்லகாலம், மழை வந்து பசேல்னு இருக்கு. ஒரு வருஷம் முன்னாடி கொடும...ஊரு சந்தோஷமா செழிப்பா இருப்பது, குழந்தைகள் முகத்தில் தெரியும்.

Thursday, November 23, 2006

"நான் என்ன கைநாட்டா?"


Finger Print Security Access System முன்பு ஒரு விஞ்ஞானி கேட்டுக்கொண்டிருக்கிறார், "நான் என்ன கைநாட்டா?".

இந்த வாரம் ஆனந்தவிகடன் "கற்றதும் பெற்றதும்" பகுதியில் சுஜாதா அவர்கள் அறிவித்த போட்டிக்கு என்னுடைய பங்களிப்பு. ஒரே வரியில் ஒரு அறிவியல் கதை. ஒரு வாரத்திற்குள் படைப்பை அனுப்பி பங்கேற்க என்னால் இயலவில்லை.

Wednesday, November 22, 2006

பூத்தாலும் காயா மரம்...

பழமொழி நானூறு - 93ம் பாடல்

பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.


முதல் வரியை தவிற வேறெதும் புரியவில்லை.தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.தியாகராஜன்.ரெங்கராஜன்@ஜீமெயில்.காம்

Friday, November 17, 2006

ட்டுர்ர்ர்ர்ர்ர்.....

(அண்ணா நகர் 12வது மெயின் ரோடு 3வது ஆட்டோ ஸ்டேண்டு)
"இந்தாப்பா ஆட்டோ அப்பல்லோ வருமா?..."
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்ர்...

"பாத்து என்னய புடிச்சி உக்காந்துக்க. இவனுங்க ஓட்டுற ஓட்டுல..."
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...

(சாந்தி காலனி சிக்னல் 11 10 9 8 7 6 5 4 3 2 1)
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...
"இப்பிடிதான் மூணு வருஷம் முந்தி உங்கப்பா 110 ரூபாய ஆட்டோல மிஸ் பண்ணிட்டாராம். இவனுங்கள நம்பவே கூடாது."
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...
"எதுக்குப்பா இப்படி சந்து சந்தா சுத்தற... காசு நான்ல தர்றேன்."
ட்டுர்ர்ர்...

(கீழ்பாக் சிமெட்ரீ ரோடு)
"இவங்க மீட்டர்ல வெக்கற சூட்ல தான் இன்னைக்கு வெயில் 45 டிகிரிய தொடுது."
ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...

(சங்கம் தியேட்டர் எதிரில் அப்பல்லோ)
"அம்மாடி ஒருவழியா வந்துட்டான்டி. எவ்ளோப்பா ஆச்சி?..."

"நம்ம வண்டி பிரசவத்துக்கு இலவசம்மா..."

அம்மாவும் பெண்ணும் வாயடைத்து நின்றனர்.

Monday, November 13, 2006

சூடு போட்டுக் கொண்ட பூனை நான்

ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்பொதும்.
-"வலி" என்ற தலைப்பில் வித்யாஷங்கர் அவர்கள் ஆனந்தவிகடன் முத்திரைக் கவிதையாக எழுதியது.

முன்னரே படித்திருக்கிறேன். இந்த கவிதையை என்னுடைய கற்பனை என தவறாக எண்ணி, "மேளச் சத்ததில்..." என்று பதிவு செய்ததற்கு மன்னிக்கவும். என் நண்பன் சிவசங்கர் அல்லது வேறொருவர் சுட்டிக்காட்டும் முன் என் தவறை நானே திருத்திக்கொண்ட வரையில் எனக்கு சந்தோஷமே...

Saturday, November 11, 2006

ரெண்டே வார்த்தை...

சுஜாதா அவர்களின் "சிறு சிறு கதைகள்" படித்துவிட்டு, நான் முயற்சி செய்த இரண்டு வார்த்தைக் கதை.

தலைப்பு: பலிகொடுப்பவனும் பலிகடாவும் வேண்டிக்கொண்டது.
கதை: "கடவுளே, காப்பாத்து!"

Friday, November 10, 2006

மூதுரை - 2ம் பாடல்

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்


நல்லவருக்கு நாம் செய்த உதவி கல் மேல் எழுத்து போல நீடித்துக் காணப்படும் என்றும், ஈரமிலாத நெஞ்சத்தார்க்கு செய்த உதவி நீர் மேல் எழுத்துப்போல் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் எனக்கு சந்தேகம் என்னவெனில், காணப்படும் என்பது யாரால்? உதவி பெறுபவராலா, உதவி செய்யும் நம்மாலா அல்லது ஒரு மூன்றாம் நபராலா?

உதவி பெறுபவர் நாம் செய்த உதவியை நினைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறில்லையா? நாம் பிறருக்கு ஒரு கையால் செய்த உதவி மறு கைக்கே தெரியக்கூடாது என்றெங்கேயோ படித்த ஞாபகம். அப்படியிருக்க, நாம் அதை கல்மேல் எழுத்துபோல நினைத்துக்கொண்டேயிருக்கலாமா? நாம் பிறருக்கு செய்த உதவி மூன்றாமவருக்கு தெரியலாமா?

நான் கேட்பது சத்தியமாக விவாதமல்ல. என் தேடலுக்கான விடை. தயவு செய்து என்னை தெளிவடையச் செய்யவும்.

மேளச் சத்ததில்...

ரொம்ப வருஷமாவே என் மனசை அறுத்துக் கொண்டிருந்த வார்த்தைகள். இப்போது தான் எழுத்தாக்க முடிந்தது.

"ஓங்கி ஒலிக்கும்
மேளச் சத்ததில்
கேட்கப்படாத விசும்பல் ஒலி."


எல்லோருக்கும் கல்யாணத்திற்கு முன்னொரு காதல் இருந்ததாக பலமாக நம்புகிறேன். வேறொருவரை காதலித்த மணப்பெண்ணோ, மணமகனோ அல்லது அவர்களை ஒருதலையாக காதலித்தவர்களின் விசும்பல் ஒலி மேளச்சத்ததில் கேட்கப்படாமல் போவது உறுதி.

Thursday, November 02, 2006

பட்டாம்பூச்சி பறக்குது...

நாளைக்கு பெங்களூர் (பெங்களூரூ) போகிறேன். என்னோட ஃப்ரெண்டுக்குக் கல்யாணம் வரும் திங்கள்கிழமை. ஆப்ரேஷன் முடிந்து முதல் பயணம். ட்ரெய்ன்ல போறதால ஒன்னும் பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்.

பெங்களூரைப் பற்றி நினைக்கும் போதே மனசில ஒரு பட்டாம்பூச்சி பறக்குது. ஒரு உற்சாகம் கிடைக்குது. நான் பெங்களூரிலிருந்த ஒன்றரை வருஷம் என்னால மறக்க முடியாதது. காலை தரையில் ஊன்றி நடக்காத காலம். எப்பொதும் ஏதோ ஒரு விஷயம் என்னை மிதக்க வைத்துக்கொண்டே இருந்தது. சரி இறந்த காலம் பற்றி பேசிப் புண்ணியமில்லை.

வேறென்ன...

Wednesday, November 01, 2006

அர்த்தம் புரிந்தவர்கள்...

இதை நான் எங்கையோ படித்திருக்கிறேன். இதன் அர்த்தம் புரிந்தவர்கள் தயவு செய்து எனக்கும் சொல்லவும்.

"எனக்காக எதையும் வைத்துக்கொள்ளாதபோது, என்னிடமிருந்து எவரும் எதையும் எடுத்துக்கொள்ள முடியாது."

ப்ரேக் பிடிக்கல...

பொதுவா நான் இந்த forwarded SMSஐ படிப்பதில்லை. ஆனா இன்னைக்கு மதுபரத் அனுப்பிய ஒரு ஜோக்கை ரசித்தேன்.

ஆசிரியர்: ஏன்டா சைக்கிளை எம்மேல மோதின?
மாணவன்: ப்ரேக் பிடிக்கல சார்.
ஆசிரியர்: ப்ரேக் நல்லாதானடா பிடிக்குது.
மாணவன்: ப்ரேக்க நான் பிடிக்கல சார்.


இதெப்படி இருக்கு...