எழுத்துப் பிழைகளைப் பார்க்கும் போது சற்றுக் கோபம் வருகிறது. பிழையின்றி எழுதத் தோன்றுகிறது; இலக்கணம் படிக்கத் தோன்றுகிறது. பல வருட எண்ணம். படிக்கிறேன். 2017 புத்தகக் கண்காட்சியில், மா. நன்னன் அவர்களின் 'நல்ல உரைநடை எழுத வேண்டுமா?' வாங்கியிருந்தேன். இரண்டு பெரிய புத்தகங்கள்; ஏகம் வெளியீடு. பனுவல் புத்தக நிலையத்தில் அடையாளம் வெளியீடான சில இலக்கண புத்தகங்களும் வாங்கினேன். அத்தனையும் படிக்கத் திட்டம்; படிக்கத் தொடங்கியிருக்கிறேன். தொடர்ச்சியாக மேலும் சில புத்தகங்கள் வாங்கலாம் என்ற எண்ணம். பாரி தான் சிறந்த இடமாகத் தோன்றியது. அவர்கள் பதிப்பித்த அ. கி. பரந்தாமனாரின் 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?' என்ற தலைப்பில் ஒரு நல்ல புத்தகம் என்னிடம் இருந்தது.
பாரி நிலையத்தின் உரிமையாளர் அமர்ஜோதி அவர்களிடம் பேச வாய்ப்யுக் கிடைத்தது. முன்னர் ஒரு முறை என்னை 'அம்மா வந்தாள்' நாவல் படிக்கச்சொல்லிப் பரிந்துரைத்ததை நினைவு கூர்ந்தேன். பேச ஆரம்பித்ததும் பல எழுத்தாளர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
ஜெயகாந்தன் ஆரம்பத்தில் மிகக் கோபக்காரராக இருந்ததாகச் சொன்னார். எனக்கென்னவோ அவருடைய கடைசி எழுத்து வரை பொறிபறக்க இருப்பதாகப் படுகிறது.
எம்.ஜி.ஆர்.க்குத் தாம் மெத்தப் படித்திருக்கவில்லையே என்ற மனக்குறை இருந்ததாகவும், படித்தவர்களுக்கு மரியாதை அளிப்பவராகவும் இருந்தார் என்றும் குறிப்பிட்டார். பாரி அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கோண்டிருந்த எம். ஜி. ஆர்., மு. வ. அவர்கள் உள்ளே வரக்கண்டு எழுந்துநின்று வரவேற்றாராம்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றொரு செய்தியைப் பகிர்ந்துகொண்டர் அமர்ஜோதி அவர்கள். ஞானபீட விருது முதன்முதலில் 1964ஆம் ஆண்டு அளிக்கப்பட்டபோது அதை பாரதிதாசன் அவர்களுக்கு அளிக்கத் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பாரதிதாசன் அவர்கள் காலமானதால், வழங்க இயலாமற் போனதும், மு.வ. அவர்கள் அந்த தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
பெரியார் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பார்க்கச்சென்ற அமர்ஜோதி அவர்களை அருகினில் அழைத்து கொஞ்சம் சத்தமாகப் பேசச்சொல்லியிருக்கிறார். கட்டிலின் ஓரத்தில் கயிறு கட்டி உயரே தொங்கியக் கூடையை இறக்கி ஒரு பழத்தையும் வாஞ்சையோடு தந்திருக்கிறார்.
அறையினுள்ளே சாய்நாற்காலியில் அமர்ந்திருக்கும் இராஜாஜியிடம் அறையின் வாசலுக்கு அந்தப்புறம் இருந்தே பேச அனுமதியாம்.
அண்ணாவின் புத்தகங்களைப் பதிப்பிக்கத் தொடங்கியபோது "அவருடையதை வெளியிட்டால் என்னுடைய வெளியீடுகளை நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டாராம் இராஜாஜி. அதுபோலவே தன்னுடைய 'சக்கரவர்த்தித் திருமகன்', 'வியாசர் விருந்து', மேலுமொரு புத்தகம் ஆகியவைகளை வேறு பதிப்பகத்திற்குத் தந்துவிட்டாராம். இராஜாஜி அதிகாரத்திலிருந்தபோது அண்ணாவின் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டு, தடைசெய்யப்பட்டதனாளே கூடுதலாகவும் விற்றனவாம்.
அமர்ஜோதி அவர்களை ஒரு பதிப்பாசிரியராக அவரது அனுபவங்களைப் பதியக் கேட்டுக்கொண்டேன். அப்படி அவர் செய்து நம்மோடு பகிர்ந்துகொள்வது நமது பேறு.