துக்க நிகழ்வுக்கு வருகையில் குழந்தைகளை கூட்டி வருவது உத்தமமானது அல்ல. ஏனெனில் அவர்களால் அந்த துக்கத்தை உணர முடிவதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த மற்ற உறவுக் குழந்தைகளோடு சேர்ந்து சத்தமுடன் விளையாடுவதே அவர்கள் விரும்புவது. பெரியவர்களுக்கு அது பிடிப்பதில்லை. அச்சமயங்களில் அக்குழந்தைகளின் பெற்றோர்களின் பேரிலும் கசப்பு ஏற்படுகிறது. ஆனால் காவ்யா, என் உறவுக்காறப் பெண், 10 வயது, இவர்களில் அசாதாரணமானவள் . எளிதில் ஒட்டிக்கொண்டுவிட்டாள் என்னிடம். அவளுடனான ஒரு உரையாடல் என்னால் மறக்க முடியாதது.
"தாத்தாவுக்கு என்னாச்சு?", அவள்.
"தாத்தா செத்துட்டாங்க", நான்.
"செத்துட்டாங்கன்னா?"
"உயிர் விட்டுட்டாங்க"
"உயிர்ன்னா?"
"எப்படி சொல்லுறது உனக்கு? ஒரு சின்ன எறும்பும் இங்க இருக்கு. நம்மளும் இருக்கோம். ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ ஒண்ணு பொதுவா இருக்கு. அது தான் உயிர். அது போயிடுச்சுன்னா செத்துடுவாங்க. அது நம்ம கண்ணுக்கு தெரியாது. கரெண்ட் மாதிரி", நான் அவளுக்கு புரியாத பாஷையில் பேசினேன்.
"அப்ப சாமி கண்ணுக்கு தெரியுமா?"
"அதுதான் சாமியே!"
ஏனோ அவள் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டாள்.
No comments:
Post a Comment