Tuesday, September 19, 2017

வாங்கிக்கட்டிக்கிட்ட கதை

C Block -106 Flatலருக்க 'கார்த்திக் பழனிச்சாமி', அந்த வாட்ச்மேன்ட்ட நல்லா வாங்கிக்கட்டிக்கிட்ட கதை:

தம்பி.. தம்பீ.. எங்க விடியங்காட்டியும் கெளம்பிட்டீங்க?

ஷட்டில் ப்ராக்டீஸ்ணே.

என்னாதது?

வயிறு தொப்ப போட்டுருச்சுண்ணே. அதான் எக்ஸைஸ் மாதிரி இருக்கும்னு வெளையாட போறேன். 

ஒரு வேலையும் செய்யாம உக்காந்து உக்காந்துதான் இப்படி வயிறு வீங்கியிருக்கு. அங்க பஸ்லயே போலாம், ஆனா நீ ஆபீஸ்க்கு கார்ல போற. இங்கருக்க ஜிம்முக்குப் போகக்கூட உனக்கு புல்லட்டா. விட்டா புல்டோசர்லயே போவ நீ. மூடிட்டு நடந்து போ, இல்ல ஓடு.. ஒழிக்காமா விடமாட்டீங்கடா மெட்ராஸ நீங்க.

😳

Friday, March 03, 2017

போச்சா, போச்சாஅஅ..

அந்த சின்ன ஒர்ருவா காசு. சட்டுனு பாத்தா எட்டணா மாதிரி இருக்குமே, அது. பளிச்சுனு. கீழ கெடக்கு. பஸ் படில. இறங்கணும் அடுத்த ஸ்டாப்புல. என்ன யாரு கண்ணுக்கும் தெரியாமயா இருந்துருக்கும் இவ்ளோ நேரம்? யாரும் எடுக்கலையே? நம்ம எடுக்கலாமா வேணாமா? எல்லாரும் என்ன நினைப்பாங்க? எடுக்கல; இறங்கிட்டேன்.

இப்ப நினைச்சு என்ன பண்றது? நாலு பேரு சொல்லுக்கு பயந்தா ஒர்ருவா என்ன, எல்லாத்தையும் தான் எழக்க வேண்டியிருக்கும். மயிராச்சுன்னு இனி நம்ம போக்குல நம்ம போக வேண்டியது தான்.

Friday, February 24, 2017

எழுத்தாளர்கள், அனுபவப்பகிர்வு..

எழுத்துப் பிழைகளைப் பார்க்கும் போது சற்றுக் கோபம் வருகிறது. பிழையின்றி எழுதத் தோன்றுகிறது; இலக்கணம் படிக்கத் தோன்றுகிறது. பல வருட எண்ணம். படிக்கிறேன். 2017 புத்தகக் கண்காட்சியில், மா. நன்னன் அவர்களின் 'நல்ல உரைநடை எழுத வேண்டுமா?' வாங்கியிருந்தேன். இரண்டு பெரிய புத்தகங்கள்; ஏகம் வெளியீடு. பனுவல் புத்தக நிலையத்தில் அடையாளம் வெளியீடான சில இலக்கண புத்தகங்களும் வாங்கினேன். அத்தனையும் படிக்கத் திட்டம்; படிக்கத் தொடங்கியிருக்கிறேன். தொடர்ச்சியாக மேலும் சில புத்தகங்கள் வாங்கலாம் என்ற எண்ணம். பாரி தான் சிறந்த இடமாகத் தோன்றியது. அவர்கள் பதிப்பித்த அ. கி. பரந்தாமனாரின் 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?' என்ற தலைப்பில் ஒரு நல்ல புத்தகம் என்னிடம் இருந்தது.

பாரி நிலையத்தின் உரிமையாளர் அமர்ஜோதி அவர்களிடம் பேச வாய்ப்யுக் கிடைத்தது. முன்னர் ஒரு முறை என்னை 'அம்மா வந்தாள்' நாவல் படிக்கச்சொல்லிப் பரிந்துரைத்ததை நினைவு கூர்ந்தேன். பேச ஆரம்பித்ததும் பல எழுத்தாளர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

ஜெயகாந்தன் ஆரம்பத்தில் மிகக் கோபக்காரராக இருந்ததாகச் சொன்னார். எனக்கென்னவோ அவருடைய கடைசி எழுத்து வரை பொறிபறக்க இருப்பதாகப் படுகிறது.

எம்.ஜி.ஆர்.க்குத் தாம் மெத்தப் படித்திருக்கவில்லையே என்ற மனக்குறை இருந்ததாகவும், படித்தவர்களுக்கு மரியாதை அளிப்பவராகவும் இருந்தார் என்றும் குறிப்பிட்டார். பாரி அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கோண்டிருந்த எம். ஜி. ஆர்., மு. வ. அவர்கள் உள்ளே வரக்கண்டு எழுந்துநின்று வரவேற்றாராம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றொரு செய்தியைப் பகிர்ந்துகொண்டர் அமர்ஜோதி அவர்கள். ஞானபீட விருது முதன்முதலில் 1964ஆம் ஆண்டு அளிக்கப்பட்டபோது அதை பாரதிதாசன் அவர்களுக்கு அளிக்கத் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பாரதிதாசன் அவர்கள் காலமானதால், வழங்க இயலாமற் போனதும், மு.வ. அவர்கள் அந்த தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

பெரியார் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பார்க்கச்சென்ற அமர்ஜோதி அவர்களை அருகினில் அழைத்து கொஞ்சம் சத்தமாகப் பேசச்சொல்லியிருக்கிறார். கட்டிலின் ஓரத்தில் கயிறு கட்டி உயரே தொங்கியக் கூடையை இறக்கி ஒரு பழத்தையும் வாஞ்சையோடு தந்திருக்கிறார்.

அறையினுள்ளே சாய்நாற்காலியில் அமர்ந்திருக்கும் இராஜாஜியிடம் அறையின் வாசலுக்கு அந்தப்புறம் இருந்தே பேச அனுமதியாம்.

அண்ணாவின் புத்தகங்களைப் பதிப்பிக்கத் தொடங்கியபோது "அவருடையதை வெளியிட்டால் என்னுடைய வெளியீடுகளை நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டாராம் இராஜாஜி. அதுபோலவே தன்னுடைய 'சக்கரவர்த்தித் திருமகன்', 'வியாசர் விருந்து', மேலுமொரு புத்தகம் ஆகியவைகளை வேறு பதிப்பகத்திற்குத் தந்துவிட்டாராம். இராஜாஜி அதிகாரத்திலிருந்தபோது அண்ணாவின் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டு, தடைசெய்யப்பட்டதனாளே கூடுதலாகவும் விற்றனவாம்.

அமர்ஜோதி அவர்களை ஒரு பதிப்பாசிரியராக அவரது அனுபவங்களைப் பதியக் கேட்டுக்கொண்டேன். அப்படி அவர் செய்து நம்மோடு பகிர்ந்துகொள்வது நமது பேறு.

Tuesday, February 07, 2017

நீ என்ன பெரிய?

உன் கோபம் நியாயமானது தான்.. இல்லங்கல.. மொத்தத் தமிழ் பத்திரிக்கைகளும் நீ பக்கம் பக்கமா எழுதித் தள்ளுறதப் பத்தி ஒரு பத்து வார்த்தைகக் கூட எழுதல.. எல்லாவனும் சேந்து உனக்கெதிரா சதி பண்ணுறானுங்க.. ஆனா அதுக்காக "விக்கியில் பொன்னியின்செல்வனுக்கே வெண்முரசை விடப்பெரிய பக்கம் உள்ளது." அப்படின்னு நீ சொல்றது தப்பு. அது என்ன 'கே'? பொன்னியின் செல்வன் என்ன மட்டமா? உனக்கு உன் எழுத்து பெருசு.. அடுத்தவன் எழுத்த நீ என்ன  குறைச்சு சொல்றது? அதும் செத்தவன் எழுத்தின எழுத்தப் பத்தி.. எத்தன லட்சம் பேர் படிச்சுருக்கான்.. எத்தன லட்சம் பேர் திரும்பத் திரும்ப படிச்சுருக்கான்.. உன்னோடத அத்தன பேர் மெச்சுவானா? கோவம் வந்தா என்ன வேணா எழுத்திடுறதா?

Thursday, February 02, 2017

ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன

திருமண உறவு பத்தி 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' கதையில் ஜெயகாந்தன் சொல்வது, "மற்ற உறவுகளின் பிடி குறைஞ்சாத்தான் இத்தப் புதிய உறவு பலப்படும்." இது பெத்தவங்களுக்கும் மத்த உறவுங்களுக்கும். கொஞ்சம் அவங்கள விட்டுத் தள்ளி இருக்கச் சொல்றாரு. இன்னும் சொல்றாரு, "முப்பது வயசுலேயும் அம்மாவோடகுழந்தையா இருக்கணும்னு விரும்பினா- சரி குழந்தையாவே இருக்கட்டும்." இது கல்யாணம் பண்ணிக்கிற அந்தப் பையனுக்கும் பொண்ணுக்கும். குறிப்பா அம்மா முந்தனையே புடிச்சிட்டு அலைஞ்ச பசங்க பொண்ணுங்களுக்கு.

ஜெயகாந்தன் புத்தகங்கள்

ஆனந்த விகடன் பதிப்பித்த 'ஜெயகாந்தன் கதைகள்' முன்னர் வார இதழில் வந்த அதை வடிவில் வெளியிட எண்ணி, துணுக்குகள் பழைய விளம்பரங்களுடன் வெளிவந்துள்ளது. அந்தத் துணுக்குகளும் விளம்பரங்களும் நீக்கப்பட்டிருக்கலாம். கதைகள் மட்டுமே அதன் பழைய சித்திரங்களுடன் புத்தகத்தைச் சிறப்பாக்கியிருக்கும். பொதுவாக விகடன் வெளியிடும் புத்தகங்களில் அச்சுத்தாள் தரமானதாக இருப்பத்தில்லை. மெல்லிய, சில வருடங்களிலேயே பழுப்பேறக் கூடியவை. விலை மட்டும் குறைவேயில்லை. அட்டையும் கெட்டியாக இல்லை.

கவிதா வெளியீடாக வந்துள்ள 'ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள்' படங்கள் இல்லயே தவிர தரமான கெட்டி அட்டையிடன் நல்ல தாளில் உள்ளது. மொத்தம் 52 சிறுகதைகள்.

Friday, January 27, 2017

ஜெயகாந்தன் எழுத்துகள்

முன்னெபோதோ ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் படித்திருந்ததும், அது பிடித்திருந்ததும் ஞாபகம். விகடன் வெளியீடான 'ஜெயகாந்தன் கதைகள்' புத்தகமும், கவிதா வெளியீடான 'ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள்' புத்தகமும் இன்று வாங்கினேன். 'யுகசந்தி', 'சீட்டாட்டம்', 'விழுதுகள்' மற்றும் 'பிரளயம்' ஆகிய கதைகள் படித்தேன். இவ்வளவு நாளும் அவரைப் படிக்காதுபோனது வருத்தம். இனி விடப்போவதில்லை. திரும்பத் திரும்ப படிக்கவேணும்.

Sunday, January 01, 2017

முற்றும்

வருடத்தின் கடைசிப் பத்து நாட்களில் பொன்னியின் செல்வனும் சிவகாமியின் செல்வனும் படித்து முடிக்க முடிந்தது. 2016இல் படித்த மற்றொரு புனைவு விஷ்ணுபுரம். தொடர்ந்து படிப்பது 5 வருஷமாக மிகக் குறைந்திருந்தது. 2016ல் மீண்டும் புத்தகங்களை எடுத்தது பற்றி மகிழ்ச்சி.

2017ல் மாதத்திற்கு ஒன்றாக மொத்தம் 12 புனைவுகள் படிக்கத் திட்டம். அதில் முதலாவதாக Kavitha Kane எழுதிய என்னிடம் உள்ள இரு புத்தகங்களில் ஒன்றை படிக்கவேண்டும். Menaka's Choice அல்லது Sita's Sister. பார்க்கலாம்.