Wednesday, May 28, 2008

இறைவனடி சேருதல்

துக்க நிகழ்வுக்கு வருகையில் குழந்தைகளை கூட்டி வருவது உத்தமமானது அல்ல. ஏனெனில் அவர்களால் அந்த துக்கத்தை உணர முடிவதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த மற்ற உறவுக் குழந்தைகளோடு சேர்ந்து சத்தமுடன் விளையாடுவதே அவர்கள் விரும்புவது. பெரியவர்களுக்கு அது பிடிப்பதில்லை. அச்சமயங்களில் அக்குழந்தைகளின் பெற்றோர்களின் பேரிலும் கசப்பு ஏற்படுகிறது. ஆனால் காவ்யா, என் உறவுக்காறப் பெண், 10 வயது, இவர்களில் அசாதாரணமானவள் . எளிதில் ஒட்டிக்கொண்டுவிட்டாள் என்னிடம். அவளுடனான ஒரு உரையாடல் என்னால் மறக்க முடியாதது.

"தாத்தாவுக்கு என்னாச்சு?", அவள்.
"தாத்தா செத்துட்டாங்க", நான்.
"செத்துட்டாங்கன்னா?"
"உயிர் விட்டுட்டாங்க"
"உயிர்ன்னா?"
"எப்படி சொல்லுறது உனக்கு? ஒரு சின்ன எறும்பும் இங்க இருக்கு. நம்மளும் இருக்கோம். ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ ஒண்ணு பொதுவா இருக்கு. அது தான் உயிர். அது போயிடுச்சுன்னா செத்துடுவாங்க. அது நம்ம கண்ணுக்கு தெரியாது. கரெண்ட் மாதிரி", நான் அவளுக்கு புரியாத பாஷையில் பேசினேன்.
"அப்ப சாமி கண்ணுக்கு தெரியுமா?"
"அதுதான் சாமியே!"
ஏனோ அவள் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டாள்.

Monday, April 21, 2008

பொம்பளப் புள்ள யாருது?

(முன் குறிப்பு: கதை 2033ல் நடப்பதாக கற்பனை செய்துகொள்ளவும்.)


"இனி ஒன்னும் பயமில்லம்மா, ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சுது. இன்னும் ஒரே வாரத்துல அவர வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்."
கண்களில் நன்றியை மீறிய ஏதோ உணர்வுடன் டாக்டரைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் ஃபரீதா.

"டாக்டர், உங்க வீட்டிலிருந்து போன்!" வெளியே வந்த டாக்டர் கோமதியிடம் நர்ஸ் சொன்னாள்.

"இவங்க கணவரை இன்னும் ஆறு மணி நேரம் அப்சர்வேஷ்ன்ல வையுங்க.", என்று நர்ஸிடம் கூறிவிட்டு வேகமாக ரிசப்ஷன் நோக்கி நகர்ந்தாள் டாக்டர் கோமதி இளங்கோ.

"ஹலோ, சொல்லும்மா..." எதிர்முனையில் அவளது அம்மா காமாட்சி.
"கோமதி, உங்கப்பாவும் நானும் ஆஸ்பத்திரிக்கு வந்துகிட்டிருக்கோம்"
"என்னாச்சும்மா?"
"உங்கப்பாவுக்கு கையில அடி"
"எப்படிம்மா? என்னாச்சு?"
"அதுக்கெல்லாம் நேரமில்ல. நேர்ல சொல்றேன்"
"நான் ஆம்புலன்ஸ் அனுப்பட்டுமா?"
"வேணாம். நாங்க வந்துடுறோம்."
இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பதற்றத்துடன் காத்திருந்தாள். பதினைந்து நிமிடத்தில் என்னெனன்்னவோ பயங்கரமாக கற்பனைகள் செய்துவிட்டாள். வாசலில் வந்திரங்கிய அப்பாவைப் பார்த்ததும் தான் நிம்மதிப் பெருமூச்சு.

அப்பாவைக் கைத்தாங்கலாக கூட்டி வருவது…. அட முகமது. அவள் முகம் மலர்ந்தது. முகமது அவளது பள்ளித் தோழன். தோழன் என்பதைவிட அவளது உடன்பிறவா சகோதரன்.

அப்பாவுக்கு முதலுதவி செய்துகொண்டே முழு விவரத்தையும் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் கோமதி.
"இவருக்கு வயசாயிடுச்சே தவிர இன்னும் ரோட்ட க்ராஸ் பண்ணக்கூடத்தெரியலடி. இந்த தம்பி இல்லன்னா இந்நேரம்…" என்று கேவினாள்.

நன்றி கூற வாயெடுத்த கோமதியை இடைமறித்து, "என்ன கோமதி இது. என் அப்பாவுக்கு செஞ்சிருக்க மாட்டேனா? விடு. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு."
"நீ டாக்டரா இருக்கறது எனக்கு தெரியாது. அதுவும் இந்த ஹாஸ்பிட்டல்ல. எங்கப்பாவைக்கூட இங்கதான் அட்மிட் செய்திருக்கோம் ஆப்ரேஷனுக்காக", தொடர்ந்தன்.

"இங்கயா? எனக்கு தெரியாமயா?"

"இப்பதான் அவருக்கு ஆப்ரேஷன். அவர பார்க்கத்தான் வந்துட்டிருந்தேன். வழியில ஆக்ஸிடென்ட கவனிச்சதும் இவங்கள இங்க கூட்டிட்டு வந்த்தேன்."

"உங்க அப்பா பேரு அன்சாரியா?"

"ஆமா. உனக்கு எப்படித் தெரி…யும்?", புரிந்தது அவனுக்கு.

"ஒன்னும் கவலைப்படாதே! நான் தான் அவருக்கு ஆப்ரேஷன் பண்ணின டாக்டர். இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க. வா போய் பார்க்கலாம்"

மகனுடன் உள்ளே வந்த டாக்டரைக் கண்டதும் எழுந்து நின்றாள் ஃபரீதா. அவளை உட்காரச்செய்துவிட்டு தன் பெற்றோரை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள் டாக்டர் கோமதி.

காமாட்சியையும், இளங்கோவையும் கண்ட ஃபரீதாவுக்கு இருபத்தைந்து வருடம் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது. அவர்களிருவரின் நினைவிலும் அதே ஓட்டம். காமாட்சியும், ஃபரீதாவும் ஒரே நேரத்தில் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் பிள்ளை பெற்றது, இருவரும் பெற்ற குழந்தைகள் தவறுதலாக மாறிப்போனது, ஆண் குழந்தை தான் தன்னுடையது என்று இரு குடும்பத்தாரும் முறையிட்டது, பெண் குழந்தை ஒருவருக்கும் வேண்டாமல் போனது, பின்னர் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து ஆண் குழந்தை ஃபரீதாவுடையதென்றும், பெண் குழந்தை காமாட்சியினுடையதென்றும் தீர்ப்பானது இருவர் நினைவிலும் நிழலாடியது.

"கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, என் வயித்துல பிறக்காட்டியும் என் புருஷனை காப்பாத்துன நீதான்டி என் பொண்ணு", என்று கோமதியைக் கட்டிக் கொண்டாள் ஃபரீதா.

அதெப்படி, இவ என் பொண்ணுதான் என்று ஃபரீதாவிடம் சண்டைக்குத் தயாரானாள், காமாட்சி.

எதுவும் விளங்காமல் விழித்தனர் கோமதியும், முகமதும்.

(பின் குறிப்பு: இந்தக் கதையில் வரும் அனைத்து பெயர்களும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல!)

Wednesday, April 09, 2008

ரூபாயின் மதிப்பு எவ்வளவு?

முடி வெட்டிக்க சலூனுக்குப் போயிருந்தேன் (வேறெங்கடா போவாங்க?). முடி வெட்டுறவன் வேறொருத்தங்கிட்ட சொல்லுறான், "டேய்! அம்பது ரூவா எடுத்துட்டுப் பாரிஸிக்குப் (தமிழில் பாரிமுனை) போயிருந்தேன் ராத்திரி." அதுக்கு அவன் சொல்லுறான், "நீயும் நம்ம வேலு மாதிரி ஆயிடாதடா. அவன் இப்பவே AIDS வந்தவன் மாதிரி இருக்கான்." அதுக்கு முதலாமவன் சொன்னான், "வேலு பெரியாலுடா! பாத்தே சொல்லுறான் இது அம்பது ரூவா, இது அருவத்தஞ்சு, எழுவத்தஞ்சுன்னு. பதிமூனு ரூவாய்க்குகூட ஒன்னு காம்பிச்சான். போலாமாடா இன்னக்கி ராத்திரி?".
Value for money என்பதை இவ்வளவு தெளிவாக யாரும் புரியவைக்க முடியாது.

Wednesday, March 19, 2008

இந்த song dedicated to...

டேய் பொழப்பத்தவனே! எஃப் எம் ரேடியோக்கு போன் பண்ணி, "என் கேர்ள் ஃபிரண்டோட காலர் டியூன் இரவாப் பகலா குளிரா பாட்டு. அத போடுங்க"ன்னு கேக்குற. உங்கப்பன் யாருக்கோ போன் பண்ணி உன் காலேஜ் பீஸ் கட்ட கடன் கேக்குறார்டா...

Thursday, February 21, 2008

கற்றது தமிழ் (சினிமா)

பாதிக்கும் அதிகமான தமிழர்கள் கேட்டிராத தமிழ்ப் பாடல்களையெல்லாம் தண்ணியடித்துவிட்டு தனியாக காரில் போவோரிடம் ஒப்பிக்கும் தமிழ் வாத்தியார், பிரபாகர். கால்சென்டரில் வேலை செய்பவரே அசந்துபோகும் அளவிற்கு ஆங்கிலம் பேசவும் தெரிந்திருக்கிறது அவருக்கு. ஆனால், தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்குவதற்கு காரணம் தான் தான் என்பது தெரிவதில்லை. படிப்பு அறிவை வளர்ப்பதர்க்காக மட்டுமே; வேலை வாங்கித்தர அல்ல என்பதை உணராத வாத்தியார். கைக்குட்டை விற்கும் அவரது கல்லூரி தோழர் பிழைக்கும் வழி தெரிந்திருக்கிறார்."பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை" என்று பாரதிதாசன் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ எனக்குத் தெரியாது. ஆனால், தான் 26 வயது வரை உடலுறவுகொள்ளாத காரணத்தால், கடற்கரையில் நெருக்காமாக அமர்ந்திருக்குமொரும் ஜோடியை சுட்டுக் கொல்ல பாரதிதாசன் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. "கற்றது தமிழ்", இயக்குனரின் இயலாமை அல்லது ஆற்றாமையின் வெளிப்பாடு, குமுறல்.

Monday, January 07, 2008

ஒட்டகக் கொம்ப எங்க காணோம்?

"கால் முளைத்த கதைகள்" புத்தகம், குழந்தைகளுக்காக எஸ். ராமகிருஷ்னன் அவர்கள் எழுதியது.

தன்னிடமிருந்த அழகான வாலை குதிரைக்கும், கொம்பை எருதிற்கும் கொடுத்து ஏமாந்த ஒட்டகத்தைப் பற்றிய அரேபியப் பழங்குடி மக்கள் கூறும் கதை அதில் ஒன்று. கதையிலுள்ளது போல் ஒட்டகதிற்கு கொம்பும் வாலும் இருந்தால்?

இந்த படம் ஆனந்த் செய்து தந்தது.