Thursday, November 29, 2018

Netflix Binging

Netflix Binge watching என்ன நமக்கு புதுசா?
நம்ம முன்னாடியே தான் இதெல்லாம் பண்ணிருக்கமே.
வாராவாரம் காத்திருந்து படிக்கல்லாம் பொறுமை இருந்ததில்ல. தொடர்கதை முழுசும் வெளியான பிறகு ஒரே தொகுப்பா புத்தகமா வரும்போது படிக்குறது, வாராவாரம் வெளிவந்தப் பக்கங்களை கிழிச்சு சேர்த்து வைச்சு bind பண்ணி படிச்சதில்லையா? அது மாதிரிதான் இப்ப, காலத்துக்கேத்த மாதிரி binge watching. மொத்தத்தையும் ஒட்டா வரிசையா பாக்குறது. Bingingக்கு தமிழ் வார்த்தை என்னவா இருக்கும்?

Tuesday, September 19, 2017

வாங்கிக்கட்டிக்கிட்ட கதை

C Block -106 Flatலருக்க 'கார்த்திக் பழனிச்சாமி', அந்த வாட்ச்மேன்ட்ட நல்லா வாங்கிக்கட்டிக்கிட்ட கதை:

தம்பி.. தம்பீ.. எங்க விடியங்காட்டியும் கெளம்பிட்டீங்க?

ஷட்டில் ப்ராக்டீஸ்ணே.

என்னாதது?

வயிறு தொப்ப போட்டுருச்சுண்ணே. அதான் எக்ஸைஸ் மாதிரி இருக்கும்னு வெளையாட போறேன். 

ஒரு வேலையும் செய்யாம உக்காந்து உக்காந்துதான் இப்படி வயிறு வீங்கியிருக்கு. அங்க பஸ்லயே போலாம், ஆனா நீ ஆபீஸ்க்கு கார்ல போற. இங்கருக்க ஜிம்முக்குப் போகக்கூட உனக்கு புல்லட்டா. விட்டா புல்டோசர்லயே போவ நீ. மூடிட்டு நடந்து போ, இல்ல ஓடு.. ஒழிக்காமா விடமாட்டீங்கடா மெட்ராஸ நீங்க.

😳

Friday, March 03, 2017

போச்சா, போச்சாஅஅ..

அந்த சின்ன ஒர்ருவா காசு. சட்டுனு பாத்தா எட்டணா மாதிரி இருக்குமே, அது. பளிச்சுனு. கீழ கெடக்கு. பஸ் படில. இறங்கணும் அடுத்த ஸ்டாப்புல. என்ன யாரு கண்ணுக்கும் தெரியாமயா இருந்துருக்கும் இவ்ளோ நேரம்? யாரும் எடுக்கலையே? நம்ம எடுக்கலாமா வேணாமா? எல்லாரும் என்ன நினைப்பாங்க? எடுக்கல; இறங்கிட்டேன்.

இப்ப நினைச்சு என்ன பண்றது? நாலு பேரு சொல்லுக்கு பயந்தா ஒர்ருவா என்ன, எல்லாத்தையும் தான் எழக்க வேண்டியிருக்கும். மயிராச்சுன்னு இனி நம்ம போக்குல நம்ம போக வேண்டியது தான்.

Friday, February 24, 2017

எழுத்தாளர்கள், அனுபவப்பகிர்வு..

எழுத்துப் பிழைகளைப் பார்க்கும் போது சற்றுக் கோபம் வருகிறது. பிழையின்றி எழுதத் தோன்றுகிறது; இலக்கணம் படிக்கத் தோன்றுகிறது. பல வருட எண்ணம். படிக்கிறேன். 2017 புத்தகக் கண்காட்சியில், மா. நன்னன் அவர்களின் 'நல்ல உரைநடை எழுத வேண்டுமா?' வாங்கியிருந்தேன். இரண்டு பெரிய புத்தகங்கள்; ஏகம் வெளியீடு. பனுவல் புத்தக நிலையத்தில் அடையாளம் வெளியீடான சில இலக்கண புத்தகங்களும் வாங்கினேன். அத்தனையும் படிக்கத் திட்டம்; படிக்கத் தொடங்கியிருக்கிறேன். தொடர்ச்சியாக மேலும் சில புத்தகங்கள் வாங்கலாம் என்ற எண்ணம். பாரி தான் சிறந்த இடமாகத் தோன்றியது. அவர்கள் பதிப்பித்த அ. கி. பரந்தாமனாரின் 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?' என்ற தலைப்பில் ஒரு நல்ல புத்தகம் என்னிடம் இருந்தது.

பாரி நிலையத்தின் உரிமையாளர் அமர்ஜோதி அவர்களிடம் பேச வாய்ப்யுக் கிடைத்தது. முன்னர் ஒரு முறை என்னை 'அம்மா வந்தாள்' நாவல் படிக்கச்சொல்லிப் பரிந்துரைத்ததை நினைவு கூர்ந்தேன். பேச ஆரம்பித்ததும் பல எழுத்தாளர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

ஜெயகாந்தன் ஆரம்பத்தில் மிகக் கோபக்காரராக இருந்ததாகச் சொன்னார். எனக்கென்னவோ அவருடைய கடைசி எழுத்து வரை பொறிபறக்க இருப்பதாகப் படுகிறது.

எம்.ஜி.ஆர்.க்குத் தாம் மெத்தப் படித்திருக்கவில்லையே என்ற மனக்குறை இருந்ததாகவும், படித்தவர்களுக்கு மரியாதை அளிப்பவராகவும் இருந்தார் என்றும் குறிப்பிட்டார். பாரி அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கோண்டிருந்த எம். ஜி. ஆர்., மு. வ. அவர்கள் உள்ளே வரக்கண்டு எழுந்துநின்று வரவேற்றாராம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றொரு செய்தியைப் பகிர்ந்துகொண்டர் அமர்ஜோதி அவர்கள். ஞானபீட விருது முதன்முதலில் 1964ஆம் ஆண்டு அளிக்கப்பட்டபோது அதை பாரதிதாசன் அவர்களுக்கு அளிக்கத் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பாரதிதாசன் அவர்கள் காலமானதால், வழங்க இயலாமற் போனதும், மு.வ. அவர்கள் அந்த தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

பெரியார் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பார்க்கச்சென்ற அமர்ஜோதி அவர்களை அருகினில் அழைத்து கொஞ்சம் சத்தமாகப் பேசச்சொல்லியிருக்கிறார். கட்டிலின் ஓரத்தில் கயிறு கட்டி உயரே தொங்கியக் கூடையை இறக்கி ஒரு பழத்தையும் வாஞ்சையோடு தந்திருக்கிறார்.

அறையினுள்ளே சாய்நாற்காலியில் அமர்ந்திருக்கும் இராஜாஜியிடம் அறையின் வாசலுக்கு அந்தப்புறம் இருந்தே பேச அனுமதியாம்.

அண்ணாவின் புத்தகங்களைப் பதிப்பிக்கத் தொடங்கியபோது "அவருடையதை வெளியிட்டால் என்னுடைய வெளியீடுகளை நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டாராம் இராஜாஜி. அதுபோலவே தன்னுடைய 'சக்கரவர்த்தித் திருமகன்', 'வியாசர் விருந்து', மேலுமொரு புத்தகம் ஆகியவைகளை வேறு பதிப்பகத்திற்குத் தந்துவிட்டாராம். இராஜாஜி அதிகாரத்திலிருந்தபோது அண்ணாவின் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டு, தடைசெய்யப்பட்டதனாளே கூடுதலாகவும் விற்றனவாம்.

அமர்ஜோதி அவர்களை ஒரு பதிப்பாசிரியராக அவரது அனுபவங்களைப் பதியக் கேட்டுக்கொண்டேன். அப்படி அவர் செய்து நம்மோடு பகிர்ந்துகொள்வது நமது பேறு.

Tuesday, February 07, 2017

நீ என்ன பெரிய?

உன் கோபம் நியாயமானது தான்.. இல்லங்கல.. மொத்தத் தமிழ் பத்திரிக்கைகளும் நீ பக்கம் பக்கமா எழுதித் தள்ளுறதப் பத்தி ஒரு பத்து வார்த்தைகக் கூட எழுதல.. எல்லாவனும் சேந்து உனக்கெதிரா சதி பண்ணுறானுங்க.. ஆனா அதுக்காக "விக்கியில் பொன்னியின்செல்வனுக்கே வெண்முரசை விடப்பெரிய பக்கம் உள்ளது." அப்படின்னு நீ சொல்றது தப்பு. அது என்ன 'கே'? பொன்னியின் செல்வன் என்ன மட்டமா? உனக்கு உன் எழுத்து பெருசு.. அடுத்தவன் எழுத்த நீ என்ன  குறைச்சு சொல்றது? அதும் செத்தவன் எழுத்தின எழுத்தப் பத்தி.. எத்தன லட்சம் பேர் படிச்சுருக்கான்.. எத்தன லட்சம் பேர் திரும்பத் திரும்ப படிச்சுருக்கான்.. உன்னோடத அத்தன பேர் மெச்சுவானா? கோவம் வந்தா என்ன வேணா எழுத்திடுறதா?

Thursday, February 02, 2017

ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன

திருமண உறவு பத்தி 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' கதையில் ஜெயகாந்தன் சொல்வது, "மற்ற உறவுகளின் பிடி குறைஞ்சாத்தான் இத்தப் புதிய உறவு பலப்படும்." இது பெத்தவங்களுக்கும் மத்த உறவுங்களுக்கும். கொஞ்சம் அவங்கள விட்டுத் தள்ளி இருக்கச் சொல்றாரு. இன்னும் சொல்றாரு, "முப்பது வயசுலேயும் அம்மாவோடகுழந்தையா இருக்கணும்னு விரும்பினா- சரி குழந்தையாவே இருக்கட்டும்." இது கல்யாணம் பண்ணிக்கிற அந்தப் பையனுக்கும் பொண்ணுக்கும். குறிப்பா அம்மா முந்தனையே புடிச்சிட்டு அலைஞ்ச பசங்க பொண்ணுங்களுக்கு.

ஜெயகாந்தன் புத்தகங்கள்

ஆனந்த விகடன் பதிப்பித்த 'ஜெயகாந்தன் கதைகள்' முன்னர் வார இதழில் வந்த அதை வடிவில் வெளியிட எண்ணி, துணுக்குகள் பழைய விளம்பரங்களுடன் வெளிவந்துள்ளது. அந்தத் துணுக்குகளும் விளம்பரங்களும் நீக்கப்பட்டிருக்கலாம். கதைகள் மட்டுமே அதன் பழைய சித்திரங்களுடன் புத்தகத்தைச் சிறப்பாக்கியிருக்கும். பொதுவாக விகடன் வெளியிடும் புத்தகங்களில் அச்சுத்தாள் தரமானதாக இருப்பத்தில்லை. மெல்லிய, சில வருடங்களிலேயே பழுப்பேறக் கூடியவை. விலை மட்டும் குறைவேயில்லை. அட்டையும் கெட்டியாக இல்லை.

கவிதா வெளியீடாக வந்துள்ள 'ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள்' படங்கள் இல்லயே தவிர தரமான கெட்டி அட்டையிடன் நல்ல தாளில் உள்ளது. மொத்தம் 52 சிறுகதைகள்.

Friday, January 27, 2017

ஜெயகாந்தன் எழுத்துகள்

முன்னெபோதோ ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் படித்திருந்ததும், அது பிடித்திருந்ததும் ஞாபகம். விகடன் வெளியீடான 'ஜெயகாந்தன் கதைகள்' புத்தகமும், கவிதா வெளியீடான 'ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள்' புத்தகமும் இன்று வாங்கினேன். 'யுகசந்தி', 'சீட்டாட்டம்', 'விழுதுகள்' மற்றும் 'பிரளயம்' ஆகிய கதைகள் படித்தேன். இவ்வளவு நாளும் அவரைப் படிக்காதுபோனது வருத்தம். இனி விடப்போவதில்லை. திரும்பத் திரும்ப படிக்கவேணும்.

Sunday, January 01, 2017

முற்றும்

வருடத்தின் கடைசிப் பத்து நாட்களில் பொன்னியின் செல்வனும் சிவகாமியின் செல்வனும் படித்து முடிக்க முடிந்தது. 2016இல் படித்த மற்றொரு புனைவு விஷ்ணுபுரம். தொடர்ந்து படிப்பது 5 வருஷமாக மிகக் குறைந்திருந்தது. 2016ல் மீண்டும் புத்தகங்களை எடுத்தது பற்றி மகிழ்ச்சி.

2017ல் மாதத்திற்கு ஒன்றாக மொத்தம் 12 புனைவுகள் படிக்கத் திட்டம். அதில் முதலாவதாக Kavitha Kane எழுதிய என்னிடம் உள்ள இரு புத்தகங்களில் ஒன்றை படிக்கவேண்டும். Menaka's Choice அல்லது Sita's Sister. பார்க்கலாம்.

Friday, December 30, 2016

இது ரொம்ப ஓவர்..

டீவி மெகா சீரியல்களில் வரும் கதாபத்திரங்களில் நல்லவர்கள் ரொம்ப நல்லவர்களாகவும், கெட்டவர்கள் ரொம்பக்கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். நிஜத்தில் நல்லவன் எவன் கெட்டவன் எவன்னே தெரியறதில்ல..

சுந்தர சோழனுக்கு ஜெ!

என்னவோ தெரியல, சுந்தர சோழன் நோய்வாய்ப்பட்டு தஞ்சாவூர் அரண்மனைல இருந்த அந்தக் கதையப் படிக்கும்போது, ஜெயலலிதா அம்மா அப்போல்லோ ல இருந்த எண்ணம் வருது. அரசியல் இப்பவும் எப்பவும்ஒன்னுதாம்போல.. என்ன அம்மாவுக்கு அருள்மொழிவர்மன் மாதிரி ஒரு புள்ள இல்லாமப் போய்ட்டான்..

Saturday, December 24, 2016

என் சபதம்..

இந்த டிசம்பர் 31க்குள்ள அத முடிச்சுட்டு சொல்றேன் அது என்னன்னு..
Hint: கல்கி

Sunday, December 11, 2016

புதுசா யாவாரம் ஆரம்பிக்க ஒரு ஐடியா..

ஆமா.. கட்சி உடையும்..
'அம்மா  திராவிட முன்னேற்றக் கழகம்' னு பேர் வைங்க  கட்சிக்கு..
யாவாரம் நல்லா கல்லா கட்டும்..

Friday, December 09, 2016

திரும்ப எழுதலாம்னு..


வாழ்க்கையே மா(நா)றிடிச்சு இந்த ஏழுவருஷத்துல..
தினப்படி தான் மாறுது..
மறந்துட்டு மறுபடி ஆகுற வேலைய பாக்கலாம்..

Tuesday, April 27, 2010

ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி

ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் என்ன வித்தியாசம்?
எதிர்க்கட்சி செய்யுற "பாரத் பந்த் (முழு அடைப்பு)" அடுத்த நாள் பேப்பர்ல செய்தியா கூட வராது. ஆளுங்கட்சி செஞ்சா அடுத்த நாள் பேப்பரே வராது.

Thursday, December 24, 2009

பொண்ணு எந்த ஊரு?

ஒன்னரை மணி நேரமா வரிசைல நின்னு டிக்கெட் வாங்கறப்போ கூட கால் வலிக்கல. ஆனா பின்னாடி ஒருத்தர் செல்போன்ல சத்தமா பேசி காது வலிதான் உயிர் போகுது. MSc(IT) முடிச்சுட்டு சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்றானாம் பையன் பெங்களூர்ல. அவனுக்கு பொண்ணு நல்ல இடமா பார்க்கச்சொல்லிட்டிருந்தார். பொண்ணு ITல வேலை செய்யக்கூடாதுன்றது பையனோட விருப்பம். திரும்பவும் எல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்பினாங்கன்ன, ஒருத்தராவது சம்பாரிக்கனுமே. ரொம்ப விவரம்தான்.
நல்ல வேலை அந்த புத்திசாலிக்கு இந்த ஐடியா வரல..2012ல உலகம் அழிய போகுதுன்னு, ஒரு வேற்று கிரகவாசிய கல்யாணம் செஞ்சுக்கிட்டா பிரச்சனை வரும்போது அங்க போயிடலாமில்லையா..

Thursday, December 17, 2009

நல்ல காலம் பொறக்குது.. (அ) நேரம் சரியில்லையோ...

எனக்கு மட்டும் ஏன் இதுமாதிரி நடக்கும்னு தெரியல.. இல்ல உங்களுக்கும் இப்படித்தானா? சில வருஷங்களுக்கு அப்புறம் இதுபோல திரும்பவும் நடக்குது. இது சில சமயம் ஒரு நல்ல விஷயம்னு நினைப்பேன். சில நேரம் பாக்கும் போதே பயமா இருக்கும். ஒருதடவை ரெண்டு தடவை நடந்தா ஒரு தற்செயலான நிகழ்வுன்னு விட்டுடலாம். ஆன இது வருஷக் கணக்கா நடக்குது. நடக்குது நடக்குதுன்னா அப்படி என்னதான்டா நடக்குது?
ஒன்னுமில்ல.. நான் டிஜிட்டல் கடிகாரங்களில் நேரம் பார்க்கும் போது, எண்கள் இரட்டையாக தெரிகின்றன இதுபோல..
01:01, 02:02, 03:03, 04:04 ........ 11:11, 12:12
உங்களுக்கும் தெரிவதுண்டா இதுபோல?

Friday, November 20, 2009

நாளை முதல் நான் அற்பனில்லை..

காய்கறி வாங்கி வர அண்ணாநகர் கோவை பழமுதிர் வரை அருணும் நானும் போயிருந்தோம். பெங்களூர் கமெர்சியல் ஸ்ட்ரீட்டில் பார்த்த National Geographic's Bring Your Own Bag (BYOB) Campaign ஞாபகம் வர, துணிக்கடைகளில் கொடுக்கும் பையை எடுத்துச் செல்ல நினைத்திருந்தேன். நினைத்ததோடு சரி, போகையில் மறந்துவிட்டேன். பைகளை எடுத்து வருபவர்களுக்கு இரண்டு ரூபாய் தள்ளுபடியை, இதுபோன்ற காய்கறி கடைக்காரர்களும், ஸ்பென்சர்ஸ், மோர், ரிலையன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்களும் தரலாம். பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறையும். சாக்கடைகளும் மழைநீர் வடிகால்களும் அடைத்துக்கொண்டு ஊர் நாறுவது பிளாஸ்டிக் பைகளால் தான். இரண்டு ரூபாய் தள்ளுபடி தருவதைவிட பிளாஸ்டிக் பைக்கு ஐந்து ரூபாய் வீதம் கூடுதலாக வசூலித்தால் Bring Your Own Bag நடைமுறைக்கு வரும். அதுவரை பிளாஸ்டிக் பையை கடைக்காரன் ஓசியாத்தரானே என்று வெறுங்கையை வீசிக்கொண்டு கடைக்கு வரும் அற்பங்களை நொந்துகொள்ள முடியாது.

Wednesday, May 28, 2008

இறைவனடி சேருதல்

துக்க நிகழ்வுக்கு வருகையில் குழந்தைகளை கூட்டி வருவது உத்தமமானது அல்ல. ஏனெனில் அவர்களால் அந்த துக்கத்தை உணர முடிவதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த மற்ற உறவுக் குழந்தைகளோடு சேர்ந்து சத்தமுடன் விளையாடுவதே அவர்கள் விரும்புவது. பெரியவர்களுக்கு அது பிடிப்பதில்லை. அச்சமயங்களில் அக்குழந்தைகளின் பெற்றோர்களின் பேரிலும் கசப்பு ஏற்படுகிறது. ஆனால் காவ்யா, என் உறவுக்காறப் பெண், 10 வயது, இவர்களில் அசாதாரணமானவள் . எளிதில் ஒட்டிக்கொண்டுவிட்டாள் என்னிடம். அவளுடனான ஒரு உரையாடல் என்னால் மறக்க முடியாதது.

"தாத்தாவுக்கு என்னாச்சு?", அவள்.
"தாத்தா செத்துட்டாங்க", நான்.
"செத்துட்டாங்கன்னா?"
"உயிர் விட்டுட்டாங்க"
"உயிர்ன்னா?"
"எப்படி சொல்லுறது உனக்கு? ஒரு சின்ன எறும்பும் இங்க இருக்கு. நம்மளும் இருக்கோம். ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ ஒண்ணு பொதுவா இருக்கு. அது தான் உயிர். அது போயிடுச்சுன்னா செத்துடுவாங்க. அது நம்ம கண்ணுக்கு தெரியாது. கரெண்ட் மாதிரி", நான் அவளுக்கு புரியாத பாஷையில் பேசினேன்.
"அப்ப சாமி கண்ணுக்கு தெரியுமா?"
"அதுதான் சாமியே!"
ஏனோ அவள் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டாள்.

Monday, April 21, 2008

பொம்பளப் புள்ள யாருது?

(முன் குறிப்பு: கதை 2033ல் நடப்பதாக கற்பனை செய்துகொள்ளவும்.)


"இனி ஒன்னும் பயமில்லம்மா, ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சுது. இன்னும் ஒரே வாரத்துல அவர வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்."
கண்களில் நன்றியை மீறிய ஏதோ உணர்வுடன் டாக்டரைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் ஃபரீதா.

"டாக்டர், உங்க வீட்டிலிருந்து போன்!" வெளியே வந்த டாக்டர் கோமதியிடம் நர்ஸ் சொன்னாள்.

"இவங்க கணவரை இன்னும் ஆறு மணி நேரம் அப்சர்வேஷ்ன்ல வையுங்க.", என்று நர்ஸிடம் கூறிவிட்டு வேகமாக ரிசப்ஷன் நோக்கி நகர்ந்தாள் டாக்டர் கோமதி இளங்கோ.

"ஹலோ, சொல்லும்மா..." எதிர்முனையில் அவளது அம்மா காமாட்சி.
"கோமதி, உங்கப்பாவும் நானும் ஆஸ்பத்திரிக்கு வந்துகிட்டிருக்கோம்"
"என்னாச்சும்மா?"
"உங்கப்பாவுக்கு கையில அடி"
"எப்படிம்மா? என்னாச்சு?"
"அதுக்கெல்லாம் நேரமில்ல. நேர்ல சொல்றேன்"
"நான் ஆம்புலன்ஸ் அனுப்பட்டுமா?"
"வேணாம். நாங்க வந்துடுறோம்."
இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பதற்றத்துடன் காத்திருந்தாள். பதினைந்து நிமிடத்தில் என்னெனன்்னவோ பயங்கரமாக கற்பனைகள் செய்துவிட்டாள். வாசலில் வந்திரங்கிய அப்பாவைப் பார்த்ததும் தான் நிம்மதிப் பெருமூச்சு.

அப்பாவைக் கைத்தாங்கலாக கூட்டி வருவது…. அட முகமது. அவள் முகம் மலர்ந்தது. முகமது அவளது பள்ளித் தோழன். தோழன் என்பதைவிட அவளது உடன்பிறவா சகோதரன்.

அப்பாவுக்கு முதலுதவி செய்துகொண்டே முழு விவரத்தையும் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் கோமதி.
"இவருக்கு வயசாயிடுச்சே தவிர இன்னும் ரோட்ட க்ராஸ் பண்ணக்கூடத்தெரியலடி. இந்த தம்பி இல்லன்னா இந்நேரம்…" என்று கேவினாள்.

நன்றி கூற வாயெடுத்த கோமதியை இடைமறித்து, "என்ன கோமதி இது. என் அப்பாவுக்கு செஞ்சிருக்க மாட்டேனா? விடு. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு."
"நீ டாக்டரா இருக்கறது எனக்கு தெரியாது. அதுவும் இந்த ஹாஸ்பிட்டல்ல. எங்கப்பாவைக்கூட இங்கதான் அட்மிட் செய்திருக்கோம் ஆப்ரேஷனுக்காக", தொடர்ந்தன்.

"இங்கயா? எனக்கு தெரியாமயா?"

"இப்பதான் அவருக்கு ஆப்ரேஷன். அவர பார்க்கத்தான் வந்துட்டிருந்தேன். வழியில ஆக்ஸிடென்ட கவனிச்சதும் இவங்கள இங்க கூட்டிட்டு வந்த்தேன்."

"உங்க அப்பா பேரு அன்சாரியா?"

"ஆமா. உனக்கு எப்படித் தெரி…யும்?", புரிந்தது அவனுக்கு.

"ஒன்னும் கவலைப்படாதே! நான் தான் அவருக்கு ஆப்ரேஷன் பண்ணின டாக்டர். இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க. வா போய் பார்க்கலாம்"

மகனுடன் உள்ளே வந்த டாக்டரைக் கண்டதும் எழுந்து நின்றாள் ஃபரீதா. அவளை உட்காரச்செய்துவிட்டு தன் பெற்றோரை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள் டாக்டர் கோமதி.

காமாட்சியையும், இளங்கோவையும் கண்ட ஃபரீதாவுக்கு இருபத்தைந்து வருடம் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது. அவர்களிருவரின் நினைவிலும் அதே ஓட்டம். காமாட்சியும், ஃபரீதாவும் ஒரே நேரத்தில் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் பிள்ளை பெற்றது, இருவரும் பெற்ற குழந்தைகள் தவறுதலாக மாறிப்போனது, ஆண் குழந்தை தான் தன்னுடையது என்று இரு குடும்பத்தாரும் முறையிட்டது, பெண் குழந்தை ஒருவருக்கும் வேண்டாமல் போனது, பின்னர் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து ஆண் குழந்தை ஃபரீதாவுடையதென்றும், பெண் குழந்தை காமாட்சியினுடையதென்றும் தீர்ப்பானது இருவர் நினைவிலும் நிழலாடியது.

"கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, என் வயித்துல பிறக்காட்டியும் என் புருஷனை காப்பாத்துன நீதான்டி என் பொண்ணு", என்று கோமதியைக் கட்டிக் கொண்டாள் ஃபரீதா.

அதெப்படி, இவ என் பொண்ணுதான் என்று ஃபரீதாவிடம் சண்டைக்குத் தயாரானாள், காமாட்சி.

எதுவும் விளங்காமல் விழித்தனர் கோமதியும், முகமதும்.

(பின் குறிப்பு: இந்தக் கதையில் வரும் அனைத்து பெயர்களும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல!)