Monday, April 21, 2008

பொம்பளப் புள்ள யாருது?

(முன் குறிப்பு: கதை 2033ல் நடப்பதாக கற்பனை செய்துகொள்ளவும்.)


"இனி ஒன்னும் பயமில்லம்மா, ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சுது. இன்னும் ஒரே வாரத்துல அவர வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்."
கண்களில் நன்றியை மீறிய ஏதோ உணர்வுடன் டாக்டரைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் ஃபரீதா.

"டாக்டர், உங்க வீட்டிலிருந்து போன்!" வெளியே வந்த டாக்டர் கோமதியிடம் நர்ஸ் சொன்னாள்.

"இவங்க கணவரை இன்னும் ஆறு மணி நேரம் அப்சர்வேஷ்ன்ல வையுங்க.", என்று நர்ஸிடம் கூறிவிட்டு வேகமாக ரிசப்ஷன் நோக்கி நகர்ந்தாள் டாக்டர் கோமதி இளங்கோ.

"ஹலோ, சொல்லும்மா..." எதிர்முனையில் அவளது அம்மா காமாட்சி.
"கோமதி, உங்கப்பாவும் நானும் ஆஸ்பத்திரிக்கு வந்துகிட்டிருக்கோம்"
"என்னாச்சும்மா?"
"உங்கப்பாவுக்கு கையில அடி"
"எப்படிம்மா? என்னாச்சு?"
"அதுக்கெல்லாம் நேரமில்ல. நேர்ல சொல்றேன்"
"நான் ஆம்புலன்ஸ் அனுப்பட்டுமா?"
"வேணாம். நாங்க வந்துடுறோம்."
இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பதற்றத்துடன் காத்திருந்தாள். பதினைந்து நிமிடத்தில் என்னெனன்்னவோ பயங்கரமாக கற்பனைகள் செய்துவிட்டாள். வாசலில் வந்திரங்கிய அப்பாவைப் பார்த்ததும் தான் நிம்மதிப் பெருமூச்சு.

அப்பாவைக் கைத்தாங்கலாக கூட்டி வருவது…. அட முகமது. அவள் முகம் மலர்ந்தது. முகமது அவளது பள்ளித் தோழன். தோழன் என்பதைவிட அவளது உடன்பிறவா சகோதரன்.

அப்பாவுக்கு முதலுதவி செய்துகொண்டே முழு விவரத்தையும் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் கோமதி.
"இவருக்கு வயசாயிடுச்சே தவிர இன்னும் ரோட்ட க்ராஸ் பண்ணக்கூடத்தெரியலடி. இந்த தம்பி இல்லன்னா இந்நேரம்…" என்று கேவினாள்.

நன்றி கூற வாயெடுத்த கோமதியை இடைமறித்து, "என்ன கோமதி இது. என் அப்பாவுக்கு செஞ்சிருக்க மாட்டேனா? விடு. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு."
"நீ டாக்டரா இருக்கறது எனக்கு தெரியாது. அதுவும் இந்த ஹாஸ்பிட்டல்ல. எங்கப்பாவைக்கூட இங்கதான் அட்மிட் செய்திருக்கோம் ஆப்ரேஷனுக்காக", தொடர்ந்தன்.

"இங்கயா? எனக்கு தெரியாமயா?"

"இப்பதான் அவருக்கு ஆப்ரேஷன். அவர பார்க்கத்தான் வந்துட்டிருந்தேன். வழியில ஆக்ஸிடென்ட கவனிச்சதும் இவங்கள இங்க கூட்டிட்டு வந்த்தேன்."

"உங்க அப்பா பேரு அன்சாரியா?"

"ஆமா. உனக்கு எப்படித் தெரி…யும்?", புரிந்தது அவனுக்கு.

"ஒன்னும் கவலைப்படாதே! நான் தான் அவருக்கு ஆப்ரேஷன் பண்ணின டாக்டர். இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க. வா போய் பார்க்கலாம்"

மகனுடன் உள்ளே வந்த டாக்டரைக் கண்டதும் எழுந்து நின்றாள் ஃபரீதா. அவளை உட்காரச்செய்துவிட்டு தன் பெற்றோரை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள் டாக்டர் கோமதி.

காமாட்சியையும், இளங்கோவையும் கண்ட ஃபரீதாவுக்கு இருபத்தைந்து வருடம் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது. அவர்களிருவரின் நினைவிலும் அதே ஓட்டம். காமாட்சியும், ஃபரீதாவும் ஒரே நேரத்தில் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் பிள்ளை பெற்றது, இருவரும் பெற்ற குழந்தைகள் தவறுதலாக மாறிப்போனது, ஆண் குழந்தை தான் தன்னுடையது என்று இரு குடும்பத்தாரும் முறையிட்டது, பெண் குழந்தை ஒருவருக்கும் வேண்டாமல் போனது, பின்னர் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து ஆண் குழந்தை ஃபரீதாவுடையதென்றும், பெண் குழந்தை காமாட்சியினுடையதென்றும் தீர்ப்பானது இருவர் நினைவிலும் நிழலாடியது.

"கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, என் வயித்துல பிறக்காட்டியும் என் புருஷனை காப்பாத்துன நீதான்டி என் பொண்ணு", என்று கோமதியைக் கட்டிக் கொண்டாள் ஃபரீதா.

அதெப்படி, இவ என் பொண்ணுதான் என்று ஃபரீதாவிடம் சண்டைக்குத் தயாரானாள், காமாட்சி.

எதுவும் விளங்காமல் விழித்தனர் கோமதியும், முகமதும்.

(பின் குறிப்பு: இந்தக் கதையில் வரும் அனைத்து பெயர்களும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல!)

1 comment:

Anonymous said...

First class